மும்பை-டெல்லி புயல்வேக ரயில் ஆய்வுப்பணிகள் சுறுசுறு

'கோல்டன் ரயில் கோரிடர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஜபபானை சேர்ந்த நிபுணர் குழு கடந்த வாரம் ஆய்வு நடத்தியுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வர்த்தக ரீதியிலான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
புயல்வேக ரயில்களை இயக்குவதற்கு தனி பாதைகள் அமைக்க வேண்டிய தேவையில்லை. தற்போதுள்ள ரயில் வழித்தடத்திலேயே தொழில்நுட்ப ரீதியிலான மாறுதல்களை மட்டும் மேற்கொண்டால் போதும்.இதனால், குறைந்த திட்ட மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அந்த நிபுணர் குழுகூறியுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.5,000 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.(மாநகரங்களில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன)
இதுகுறித்து மேற்கு மண்டல ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஷரத் சந்த்ராயன் கூறியதாவது:
"மும்பையிலிருந்து தற்போது இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 14 மணிநேரத்தில் டெல்லி செல்கின்றன. இவை,அதிகபட்சமாக 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், புயல்வேக ரயில்களை 200கி.மீ வேகத்தில் இயக்க முடியும். இதன்மூலம் 7 மணிநேரத்தில் டெல்லி செல்லமுடியும் என்பதால் பயணநேரம் பாதியாக குறையும்.
புயல்வேக ரயில்பாதை அமைப்பதற்காக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தற்போதுள்ள ரயில் தண்டவாளங்களை மாற்றினால் போதுமானது.குறைந்த திட்டமதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என ஜப்பான் வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.
புயல்வேக ரயிலுக்கான தண்டவாளம் மற்றும் பிரத்யேக சிக்னல்களை அமைப்பது குறித்த தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அடுத்த வாரம் ஜப்பானை சேர்ந்த மற்றொரு குழு இந்தியா வர இருக்கிறது. ஆய்வுப்பணிகள் முடிந்தவுடன் புயல்வேக ரயிலை இயக்குவற்கான அறிக்கையை ரயில்வே அமைச்சகத்திடம் வழங்கப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








