2012 வரை பஜாஜ் குட்டி கார் பற்றி சிந்தனை இல்லை- ரினால்ட்

இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் பஜாஜ் நிறுவனம், மிகக்குறைந்த விலைகொண்ட குட்டிக்கார் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த காரின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பணிகளை ரினால்ட்-நிசான் கூட்டு குழுமத்தின் வசம் ஒப்படைக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த கார் குட்டிக்காரை தயாரிக்கும் பணிகளில் பஜாஜ் நிறுவனத்துக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த ரினால்ட் நிறுவனம் குட்டிக்கார் தயாரிக்கும் திட்டத்திலிருந்து விலகப்போவதாக அண்மையில் தெரிவித்தது.
இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ மறுத்தது. இந்த நிலையில், குட்டிக் காரை அறிமுகப்படுத்துவது குறித்த தற்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை என ரினால்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ரினால்ட் மேலாண் இயக்குனர் மார்க் நசீப் கூறியதாவது:
"அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவோம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆனால், அந்த அறிவிப்பில் பஜாஜ் குட்டிக்காருக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கப்போவதில்லை..
மேலும், எங்களது இந்திய செயல்பாடுகளில் பஜாஜ் குட்டிக்காருக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கவில்லை.
அடுத்த ஆண்டு வரை குட்டிக்கார் பற்றி நாங்கள் சிந்திக்கப்போவதும் இல்லை.
இதுவரை குட்டிக்காரின் புரோட்டோடைப் எனப்படும் மாதிரிகாரை கூட பஜாஜ் வடிவமைத்து காண்பிக்கவில்லை.
குட்டிக்காரின் மாதிரி வடிவமைப்பை பார்த்த பிறகுதான், அந்த காரை மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை செய்வது குறித்து முடிவு செய்வோம்," என்றார்.
அடுத்த ஆண்டு குட்டிக்கார் அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ரினால்ட்டின் அறிவிப்பு குட்டிக்கார் திட்டத்தை மேலும் சோதனையில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








