பசுமை கார் புரட்சிக்கு வித்திட்ட பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம்

சாப்ட்வேர் சேவை வழங்குவதில் பெங்களூரை சேர்ந்த சேப் லேப் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் பசுமை கார் புரட்சிக்கு வித்திடும் வகையிலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் கார்கள் வாங்கும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மஹிந்திரா ரேவா நிறுவனத்துடன் இணைந்து சலுகைகளை வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார் வாங்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.6,000 சிறப்பு படி, அலுவலக வளாகத்தின் வாயிலுக்கு அருகில் முன்பதிவுடன் கூடிய பார்க்கிங் வசதி, அலுவலக வளாகத்தில் கார்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளும் மின் இணைப்பு வசதி ஆகியவற்றை வழங்குகிறது சேப் லேப்ஸ்.
மேலும், ரேவா கார்களுக்கு சாதாரணமாக 2 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் கார் வாங்கும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் வாரண்டியும், அலுவலகம் அல்லது வீட்டிலேயே வந்து சர்வீஸ் கொடுக்கும் வசதியையும் தரப்பட்டுள்ளது.
இதுதவிர, எலக்ட்ரிக் கார்களுக்கு மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் வழங்கும் மானியம் மூலம் காரின் விலையில் ரூ62,000 முதல் ரூ.82,000 வரை கழிவும் கிடைக்கிறது. இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் சேப் லேப் நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு ஊழியர்கள் முதலாவதாக ரேவா காரை வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து சேப் லேப் மேலாண் இயக்குனர் கூறுகையில்," சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள ஊழியர்களுக்கும், மஹிந்திரா நிறுவனத்துக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த திட்டம் மாபெரும் வெற்றி பெறும்," என்றார்.
ஆறு மாதம் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் எலக்ட்ரிக் கார் வாங்குவதற்கு தகுதி உடையவர்கள் என சேப் லேப் தெரிவித்துள்ளது. சேப் லேப் நிறுவனத்தின் புதிய முயற்சியை ஆட்டோமொபைல் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications








