கார்களில் கறுப்பு கண்ணாடிக்கு தடை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கார்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். துணிந்து குற்றச்செயல்களை புரிந்துவிட்டு, காரில் கிரிமினல்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.
மேலும், கூலிங் பேப்பர் ஒட்டப்பட்ட கார்களில் செல்லும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இதைக்கருத்தில்கொண்டு, கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும், கறுப்பு நிற கண்ணாடிகளை பொருத்துவதற்கும் தடைவிதிக்குமாறு டெல்லியை சேர்ந்த அபிஷேக் கோயாங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் அபிஷேக் கோயாங்கோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்களில் ஒட்டப்படும் கூலிங் பேப்பர் மற்றும் கறுப்பு கண்ணாடிகளால் பெருகி வரும் குற்றங்கள் குறித்த சம்பவங்களை மேற்கோள்காட்டி வாதாடினார்.
இதைகேட்ட நீதிபதி கபாடியா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கருதி மனுவை ஏற்றுக்கொண்டது.
மேலும், குற்றங்களை தடுப்பதற்கு மனுதாரரின் கோரிக்கையின்படி கார்களில் கறுப்பு கண்ணாடிகள் பொருத்துவதற்கும், கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது குறித்து பதலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications








