டாடா இண்டிகாவை குறிவைத்து ஸ்விப்ட்டுக்கு மாருதி ஏட்டிக்கு போட்டி விளம்பரம்

ஸ்விப்ட்டை விட இண்டிகா விஸ்டா கார்தான் அனைத்து அம்சங்களிலும் சிறந்தது என்பது போல் நேரடியாக தாக்கி டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் விளம்பரத்தை வெளியிட்டது. மேலும், ஸ்விப்ட்டை விட கூடுதல் அம்சங்கள் இண்டிகா விஸ்டாவில் இருப்பதாக அந்த விளம்பரத்தில் டாடா மோட்டார்ஸ் பிரச்சாரம் செய்தது.
ஸ்விப்ட்டை விட இண்டிகா விஸ்டாவில் கூடுதல் அம்சங்கள் இருப்பது குறித்து சவால் விடுப்பது போல அந்த விளம்பரத்தில் ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்போது மாருதி நிறுவனம் ஸ்விப்ட்டுக்கு புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், டாடா இண்டிகாவை டாக்சி காராக வர்ணித்து வாசங்கள் இடம்பெற்றுள்ளது.
டாடா இண்டிகா பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ஸ்விப்ட் டீசல் காருக்கு மாறுங்கள், டாக்சி இமேஜ் உள்ள காருக்கு மாற வேண்டாம் என்பதுபோல் டாடா இண்டிகாவை டாக்சியாகவும், ஸ்விப்ட்டை குடும்ப காராகவும் வர்ணித்து இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாக்சி ஓட்டுனர்கள் அதிகம் விரும்பும் காராக இண்டிகா உள்ளதால், அதையே குறிப்பிட்டு இந்த விளம்பர பிரச்சாரத்தை மாருதி மேற்கொண்டுள்ளது.
கார் மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால் இரு பெரும் முன்னணி நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் நேரடியாக மோதிக்கொண்டிருப்பது ஆட்டோ வட்டாரத்தில் மட்டுமில்லாமல், வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








