விற்பனையை அதிகரிக்க நானோவை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் டாடா மோட்டார்சின் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் அமோக வரவேற்பை பெற்ற நானோ போகப்போக விற்பனையில் கடும் சரிவை சந்தித்தது.
கடந்த ஆண்டு நானோ கார்கள் அடிக்கடி தீப்பற்றி எரிந்தததாலும், திடீர் விலை ஏற்றத்தாலும் விற்பனை கணிசமாக குறைந்தது. இதையடுத்து நானோவின் விற்பனையை பெருக்க டாடா மோட்டார்ஸ் அதிரடி சலுகைகளை அறிவித்தது.
ரூ.99க்கு மாதாந்திர சர்வீஸ்,நீட்டிக்கப்பட்ட வாரண்டி, அதிக கடன் வசதிகள் போன்ற சலுகைகளை டாடா மோட்டார்ஸ் அறிவித்தது. இதேபோன்று தீ விபத்து பற்றிய பயத்தை போக்குவதற்காக அடிக்கடி தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் செய்யப்பட்டன.
இதற்கு ஒரளவு பலன் கிடைக்கும் வகையில் நானோவின் விற்பனை உயர்ந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 509 நானோ கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், சலுகைகளால் டிசம்பர் மாதத்தில் 5,784 கார்கள் விற்பனையானது. ஆனால்,எதிர்பார்த்த அளவு விற்பனையை நானோ கார்கள் எட்டவி்ல்லை.
டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஒ.,) கூறுகையில்,"நானோ காரின் விற்பனை தற்போது 6,000 முதல் 7,000என்ற அளவி்ல் உள்ளது.இதை 8,000 முதல் 10,000ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,"என்றார்.
சிறிய கார்களுக்கு அதிக கிராக்கி உள்ள அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு நானோவை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








