அடுத்த ஆண்டுக்குள் நானோ மாத விற்பனை கணிசமாக உயரும்: டாடா

நானோ விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் கற்ற வித்தைகளையும் காட்டி வருகிறது. குறைந்த முன்பணம், மிகக்குறைந்த மாதத்தவணை உள்ளிட்ட சலுகைகளை வழங்கியும் இதுவரை குறிப்பிடத்தக்க அளவுக்கு நானோ விற்பனை வளர்ச்சி காணவில்லை.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாதத்திற்கு சராசரியாக 10,000 நானோ கார்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய நானோ காரை தற்போதைய விலையிலேயே அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தவிர, அடுத்த ஆண்டு மார்ச்சில் டீசல் நானோ காரை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மார்க்கெட் பரபரக்கிறது.
இந்த புதிய வரவுகள் மூலம் நானோ விற்பனை பன்மடங்கு உயரும் என டாடா மோட்டார்ஸ் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் இயக்குனர் பிரகாஷ் எம் தலாங் கூறியதாவது:
"பண்டிகை காலத்தில் நானோ காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. மேலும், நானோ காருக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
எனவே, நானோ விற்பனை படிப்படியாக உயர்ந்து நல்ல வளர்ச்சியை எட்டும் என கருதுகிறோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாதத்திற்கு 10,000 நானோ கார்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை எட்டும் என்று கருதுகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








