சில்வர் ஜூப்ளி கொண்டாடியது டாடா 407 மினிடிரக்

கடந்த 1986ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 407 மினிடிரக் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக வெற்றி நடைபோட்டு வருகிறது.
நாட்டின் மினி டிரக் மார்க்கெட்டில் 75 சதவீதத்தை 407 பங்கு போட்டு வருகிறது. அந்தளவுக்கு நாட்டின் சரக்கு போக்குவரத்தில் பின்னி பிணைந்துவிட்ட வாகனமாக 407 விளங்குகிறது.
கட்டுமானத்துறை, சுரங்கங்கள் உள்ளிட்டவற்றிலும், பாதுகாப்புத் துறையின் போக்குவரத்தில் டாடா 407 மினிடிரக் பெரும் பங்காற்றி வருகிறது. மேலும், 15 நாடுகளுக்கு 407 மினிடிரக் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை 5 லட்சம் டாடா 407 மினிடிரக்குகளை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிநடைபோடும் 407 மினிடிரக் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை டாடா மோட்டார்ஸ் நேற்று சில்வர் ஜூப்ளி விழாவாக கேக் வெட்டி கொண்டாடியது.
டாடா 407 வடிவமைப்பில் சில்வர் ஜூப்ளி என்று வாசகத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த கேக்கை டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி.எம்.தலாங் மற்றும் வர்த்தக வாகனப் பிரிவு தலைவர் ரவி பிஷரோடி ஆகியோர் கேக்கை வெட்டினர்.
இந்த விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
சில்வர் ஜூப்ளி விழாவில் பேசிய பி.எம்.தலாங் கூறியதாவது:
"407 மினிடிரக் பல்வேறு துறைகளின் தேவைகளை கனக்கச்சிதமாக நிறைவு செய்து வருகிறது. எனவேதான், 25 ஆண்டுகளாக மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடலாக பீடு நடைபோடுகிறது.
407 மினிடிரக் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பை வெகுவாக கூட்டியுள்ளது என்றால் மிகையில்லை.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய தயாரிப்புகளையும் வழங்குவோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








