ஏஸ் விற்பனை கணிசமாக உயர்வு: உற்பத்தியை உயர்த்தும் டாடா

மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் விற்பனை இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையவில்லை. ஆனால், இதற்கு நேர்மாறாக அந்த நிறுவனத்தின் ஏஸ் மற்றும் மாஜிக் வர்த்தக வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு 15,000 ஏஸ் லோடு ஆட்டோ மற்றும் மாஜிக் பயணிகள் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. ஆனால், மாதத்திற்கு 25,000 ஏஸ் வரிசை வாகனங்களுக்கு தேவை இருக்கிறது.
இதனால், டாடா மோட்டார்ஸ் அந்த வாகனங்களின் உற்பத்தியை ஆண்டுக்கு 2 லட்சம் அளவுக்கு உயர்த்துகிறது. இதற்காக, ஹிமாச்சல பிரதேச்சில் உள்ள பந்த் நகர் ஆலையின் உற்பத்தியை ஆண்டுக்கு 4.5 லட்சமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 3.5 லட்சமாக உள்ளது. இதுதவிர, கர்நாடக மாநிலம், தார்வாடில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலை வரும் பிப்ரவரிக்குள் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 90,000 ஏஸ் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இதில், ஏஸ் ஸிப் மற்றும் மாஜிக் ஐரிஸ் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








