இலவசமாக நானோ கார்களில் செல்ப் மோட்டாரை மாற்றித் தரும் டாடா

நானோ கார் தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், நானோ கார் விற்பனையிலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நானோ கார் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ துறையினரும், வாடிக்கையாளர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும், வசதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்து நானோ கார்களுக்கும் அதிக செயல் திறன் கொண்ட புதிய செல்ப் மோட்டாரை இலவசமாக மாற்றித்தருவதாக டாடா தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் முதல் நானோ கார்களில் செல்ப் மோட்டார்கள் மாற்றித் தரும் பணிகள் நடந்து வருவதாகவும், இதுவரை 50,000 நானோ கார்களில் புதிய செல்ப் மோட்டார்கள் பொருத்தி தரும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நானோ கார்களுக்கு படிப்படியாக செல்ப் மோட்டார்களை மாற்றித் தரப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2012மாடல் நானோ காருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும், அதில் புதிய செல்ப் மோட்டார் பொருத்தி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செல்ப் மோட்டார்கள் வழங்குவதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.110 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








