உதிரிபாகங்கள் தட்டுப்பாடு: ஹோண்டா கார் உற்பத்தியில் கடும் பாதிப்பு

ஜாஸ் மற்றும் பிரியோ கார்களுக்கு தாய்லாந்தில் இருந்து முக்கிய உதிரிபாகங்களை ஹோண்டா இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள ஆலைகளை மூடியுள்ளது ஹோண்டா.
உதிரிபாகங்கள் சப்லை தடைபட்டுள்ளதால் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார் டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில் ஹோண்டா உள்ளது.
இந்த நிலையில், கார் டெலிவிரி குறித்து ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ ஹேட்ச்பேக் காருக்கு 6,000 புக்கிங்குகளை ஹோண்டா பெற்றுள்ளது.
ஆனால், இதுவரை 1,000 கார்களை மட்டுமே டெலிவிரி செய்துள்ளது. இதேபோன்று, விலை குறைப்பு காரணமாக ஜாஸ் காருக்கு 4,000 புக்கிங்குகளை ஹோண்டா பெற்றுள்ளது. ஆனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த கார்களின் டெலிவிரியில் நீண்ட தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜாஸ் காருக்கான புக்கிங்கை ஏற்கனவே ஹோண்டா நிறுத்திவிட்டதும் நினைவிருக்கலாம். இந்த நிலையில், சீனா மற்றும் ஜப்பான் ஆலைகளிலிருந்து உதிரிபாகங்கள் சப்ளையை பெற ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இருந்தாலும், சப்ளை கிடைக்க நீண்ட காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுவதால் கணிசமான புக்கிங்கை கையில் வைத்துக்கொண்டு செய்வதறியாது ஹோண்டா விழி பிதுங்கி நிற்கிறது. மேலும், இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய சிட்டி காரின் அறிமுகத்தையும் ஹோண்டா தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








