பிரிட்டனில் 50 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்

வாகன வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியது டாடா.
இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய சந்தையில் தனது வர்த்தகத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, பிரிட்டனிலுள்ள வார்விக் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள தனது வாகன ஆராயச்சி மையத்துக்கு ரூ.350 கோடியை முதலீடு செய்கிறது டாடா.
கார்பன் புகையை குறைக்கும் தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் இந்த ஆய்வு மையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், விஸ்டா மற்றும் பிக்செல் கார்களின் எலக்ட்ரிக் மாடலை உருவாக்கும் பணிகளை இந்த ஆய்வு மையம் ஏற்றுள்ளது.
இதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.350 கோடியை இந்த ஆய்வு மையத்துக்கு செலவிட உள்ளது டாடா. மேலும், இந்த ஆய்வு மையத்தின் திறனை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக 100 எஞ்சினியர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் டாடா தெரிவித்துள்ளது.
இந்த வாகன ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்துவதன் மூலம், ஐரோப்பிய சந்தையில் நிலையான, நீண்ட கால வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என டாடா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








