வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு பிரிமியம் உயர்வு: ஐ.ஆர்.டி.ஏ., அதிரடி

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரிமியம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், பணவீக்கம், அதிக நஷ்டஈடு தொகை வழங்குதல் போன்றவற்றால் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து பரிசீலனை செய்த மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்(ஐ.ஆர்.டி.ஏ.,) மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் தொகையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ., சுற்றறிக்கையையும் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஐ.ஆர்.டி.ஏ அறிவிப்பை தொடர்ந்து, 1000 சிசி திறனுக்கு கீழ் உள்ள கார்களுக்கு மூன்றாம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் ரூ.642 லிருந்து ரூ.740 ஆகவும், 1000-1500 சிசி கார்களுக்கு ரூ.800லிருந்து ரூ.880 ஆகவும் உயர்கிறது.
இதேபோன்று, 350 சிசி திறன்கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 300 ரூபாயாக இருந்த பிரிமிய தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், ரூ.330 ஆக அதிகரித்துள்ளது. 7,500 கிலோ வரை எடை கொண்ட வர்த்தக வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமிய தொகை 68 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வர்த்தக வாகனங்களுக்கான பிரிமியம் ரூ.5,000 லிருந்து ரூ.8,240 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில்," பணவீக்கம், அதிக நஷ்ட ஈடு கொடுப்பது போன்றவற்றால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரிமிய தொகை உயர்வால், காப்பீட்டு நிறுவனங்கள் சற்று ஆறுதலைடையும். மேலும், இனி பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு ஆண்டுதோறும் பிரிமிய தொகை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








