இந்தியாவிலிருந்து கார் உதிரிபாகங்களை பெற டொயோட்டோ, ஹோண்டா முடிவு

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களாக திகழும் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மேலும், குறிப்பிட்ட சில நாடுகளில் தொழிற்சாலைகளுக்கு இந்தியாவிலிருந்து முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து கார்களை தயாரிக்கின்றன.
இதேபோன்று, வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து அசெம்பிளிங் செய்ய ஜப்பானை சேர்ந்த டொயோட்டோவும், ஹோண்டாவும் முடிவு செய்துள்ளன.
டொயோட்டோ துணை மேலாளர் சந்தீப் சிங் இதுபற்றி கூறியதாவது:
"எட்டியோஸ் காரை பல வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எட்டியோசுக்கு முக்கிய உதிரிபாகங்களை இந்தியாவிலிரு்து பெற தலைமை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எட்டியோசுக்காக பெங்களூரில் ஆண்டுக்கு 1,00,000 எஞ்சின் தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையும், ஆண்டுக்கு 2,40,000 கியர் பாக்ஸ் தயாரிக்கும் திறன்கொண்ட ஆலையும் கட்டப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
இதேபோன்று, ஜப்பானை சேர்ந்த மற்றொரு ஆட்டோமொபைல் ஜாம்பவனான ஹோண்டா நிறுவனமும், பிற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்தியாவிலிருந்து உதிரிபாகங்கள் சப்ளையை பெற முடிவு செய்துள்ளது.
தனது பிரையோ ஹேட்ச்பேக் காரை தாய்லாந்து தொழிற்சாலையில் தயாரித்து வருகிறது ஹோண்டா. தாய்லாந்து தொழிற்சாலைக்கு ராஜஸ்தான் மாநிலம் தபுகராவிலுள்ள ஹோண்டா தொழிற்சாலையிலிருந்து எஞ்சின் உள்ளிட்ட 56 முக்கிய உதிரிபாகங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, பிற வெளிநாடுகளில் பிரையோ அறிமுகம் செய்யப்படும்போது அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு இந்தியாவிலிருந்து உதிரிபாகங்களை பெற ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உதிரிபாக சப்ளையர்களிடம் ஹோண்டா பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








