ரூ.500கோடி முதலீட்டில் புதிய எஞ்சின் தொழிற்சாலை அமைக்கிறது டொயோட்டோ

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் இந்திய கார் விற்பனை சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய எஞ்சின் தொழிற்சாலை அமைக்கும் பணிகளையும், பழைய தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகளையும் டொயோட்டோ துவங்கி உள்ளது.
பெங்களுர் அருகில் உள்ள பிடதியில் ரூ.500கோடி முதலீட்டில் புதிய எஞ்சின் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது. மேலும், கியர் பாக்ஸ் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் வகையில் பழைய தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ கிர்ஸோஸ்கர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"ஆண்டுக்கு ஒரு லட்சம் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. வரும் 2012ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல் புதிய எஞ்சின் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும்.
தவிர,கியர் பாக்ஸ் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பிடதியில் உள்ள பழைய தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. விரிவுபடுத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் வரும் 2013ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆண்டுக்கு 2.40 லட்சம் கியர் பாக்ஸ்கள் உற்பத்தி செய்யப்படும்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எட்டியோசுக்கு பெரும்பான்மையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த புதிய தொழிற்சாலை மூலம் 500 பேருக்கு நேரடியாகவும், நூற்றுக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








