லிவாவை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய டொயோட்டோ திடீர் முடிவு

இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டியோஸ் என்ற செடான் காரை டொயோட்டோ அறிமுகம் செய்தது. ரூ.4.96 லட்சம் முதல் ரூ.6.86 லட்சம் விலை கொண்ட எட்டியோசுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
எட்டியோசை தொடர்ந்து லிவா என்ற குறைந்த விலை ஹேட்ச்பேக் காரை டொயோட்டோ இந்த மாதம் அறிமுகம் செய்ய இருந்தது. இந்நிலையில், எட்டியோசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், லிவா கார் அறிமுகத்தை டொயோட்டோ ஒத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ துணை மேலாண் இயக்குனர் கூறியதாவது:
"எட்டியோசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை 26,500 எட்டியோஸ் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை 5,000 எட்டியோஸ் மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. பெங்களுரில் உள்ள தொழிற்சாலையில் மாதத்திற்கு 2,500 எட்டியோஸ் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனால், எட்டியோசை பெற வாடிக்கையாளர்கள் 4 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் எட்டியோஸ் உற்பத்தியை மாதத்திற்கு 5,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதனால், எட்டியோசுக்கு காத்திருக்கும் காலம் வெகுவாக குறையும்.
இதனிடையே, லிவாவை அறிமுகப்படு்த்தினால் எட்டியோஸ் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது. லிவாவை வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், எட்டியோஸ் உற்பத்திக்காக ரூ.3,200கோடி முதலீட்டில் இரண்டாவது உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








