ஜப்பானில் நிலநடுக்கம்: டொயோட்டோவின் பெங்களுர் தொழிற்சாலை திறப்பு ஒத்திவைப்பு

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம், பெங்களுர் அருகே பிடதியில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பிடதியில் புதிதாக இரண்டாவது தொழிற்சாலையை டொயோட்டோ அமைத்துள்ளது.
புதிய தொழிற்சாலை திறப்பு விழா நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக நடைபெற இருந்த திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், டொயோட்டோ தலைவர் ஃபியூஜியோ ஜோ, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிடகா செய்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்நிலையில், ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இயற்கை பேரழிவையடுத்து, தொழிற்சாலை திறப்பு விழாவை காலவரையின்றி தள்ளி வைப்பதாக டொயோட்டோ அறி்வித்துள்ளது.
டொயோட்டோ இந்தியா செய்திதொடர்பாளர் கூறியதாவது:
"ஜப்பானில் நிகழ்ந்துள்ள பேரழிவு காரணமாக, பல லட்சம் மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிர்கதியாகி உள்ளனர். நிலநடுக்கத்தால் அங்குள்ள தொழிற்சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ள நிலையில், பெங்களுர் தொழிற்சாலை திறப்பு விழாவை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது. எனவே, பெங்களுர் தொழிற்சாலை திறப்பு விழாவை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளோம்," என்றார்.
ஆண்டுக்கு 70,000 கார்கள் உற்பத்தி திறன் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள பெங்களுர் தொழிற்சாலையில், எட்டியோஸ் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள லிவா சிறிய ரக கார்களை தயாரிக்க டொயோட்டோ தி்ட்டமிட்டுள்ளது.
மேலும் எட்டியோசுக்கு அதிக ஆர்டர்கள் குவிந்துள்ளன. புதிய தொழிற்சாலை மூலம் தேவையை நிறைவு செய்துவிடலாம் என டொயோட்டோ கணக்கு போட்டிருந்தது. புதிய தொழிற்சாலை திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் எட்டியோஸ் உற்பத்தியில் எதி்ர்பார்த்த இலக்கை எட்டுவதில் டொயோட்டோவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








