கார் கடனுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-மஹிந்திரா இடையே ஒப்பந்தம்
வாடிக்கையாளர்கள் எளிதாகவும், குறைந்த வட்டியில் கார் கடன் பெறும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன்(ஐஓபி)மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா வாடிக்கையாளர்களின் சேவையிலும் முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர்கள் சேவையில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதில், ஒரு முயற்சியாக வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கார் கடன் கிடைக்கும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அருண் மல்ஹோத்ரா, ஐஓபி வங்கின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தமிழ்நாடு சரக மண்டல பொதுமேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அருண் மல்ஹோத்ரா கூறுகையில்," பயணிகள் வாகன விற்பனை ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியையும், வர்த்தக வாகன விற்பனை ஆண்டுக்கு 35 முதல் 40 சதவீத அளவுக்கு விற்பனை வளர்ச்சி கண்டு வருகிறது.
எனவே, வாடிக்கையாளர்களுக்கு எளிதான சேவை கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கார் கடன் தவிர, எங்களது வர்த்தக வாகனங்களுக்கும் இந்த மூலம் கடன் வசதியை பெறலாம்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஐஓபி வங்கியின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் பேசுகையில்,"சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட மாநகரங்களில் இந்த கார் கடன் வசதி முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பின்னர் படிப்படியாக பிற நகரங்களில் உள்ள எங்களது வங்கி கிளைகளிலும் இந்த ஒப்பந்தம் மூலம் கடன் பெற வழிவகுக்கப்படும். தவிர, இந்த திட்டத்தின் மூலம் வர்த்தக வாகனங்களுக்கு 12.5 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








