யூஸ்டு கார் மார்க்கெட்டில் நுழைய வோக்ஸ்வேகன் திட்டம்

பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சந்தை அபார வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால், மாருதி, மஹிந்திரா, உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதைபார்த்த வெளிநாட்டு நிறுவனங்களும், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சந்தையில் நுழைய ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த 2009 ம் ஆண்டு மெர்சிடிஸ் நிறுவனமும், கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனமும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சந்தையில் நுழைந்தன.
இந்த வரிசையில், ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனமும், பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய நிறுவனத்தை துவங்கவும் வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் விற்பனைப்பிரிவு இயக்குனர் நீரஜ் கர்க் கூறுகையில்," இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் காரை மாற்றும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும் அதிக கிராக்கி நிலவுகிறது. எனவே, பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் நுழைய இதுவே சரியான தருணமாக கருதுகிறோம்," என்றார்.
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு கடன் வழங்கும் சேவையில் ஈடுபட போவதாக வோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பழைய கார் விற்பனையில் ஈடுபட போவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








