அடுத்த ஆண்டு முதல் யூஸ்டு கார்களுக்கும் வோக்ஸ்வேகன் பைனான்ஸ்

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது கார்களுக்கு சொந்த பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் 38 நாடுகளில் வோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளிக்க தனது சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் கார் கடன் வழங்கும் சேவையை துவங்க முடிவு செய்தது. இதற்காக, ரிசர்வ் வங்கியிடமியிருந்து வங்கிசாராத நிதிநிறுவனத்துக்கான லைசென்சையும் சமீபத்தில் பெற்றது.
இதைத்தொடர்ந்து, வோக்ஸ்வேகன் மற்றும் வோக்ஸ்வேகனின் சார்பு நிறுவனங்களான ஸ்கோடா மற்றும் ஆடி கார்களுக்கு கார் கடன் வழங்கும் சேவையை விரைவில் துவங்க இருப்பதாக வோக்ஸ்வேகன் பைனான்ஸ் தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார்களுக்கும் கடன் வழங்கும் சேவையை அடுத்த ஆண்டு முதல் துவங்க இருப்பதாக வோக்ஸ்வேகன் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் பைனான்ஸ் இந்தியா தலைவர் ஜோர்ன் அகீம் குர்ஸ்ராக் கூறுகையில்," இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்க்கெட் சிறப்பாக உள்ளது. எனவே, அடுத்த ஆண்டு துவக்கம் முதல் யூஸ்டு கார்களுக்கும் பைனான்ஸ் வழங்கும் சேவைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








