டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பீட்டில்: வோக்ஸ்வேகன் அறிவிப்பு

2012 மாடல் பீட்டில் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தலைமுறை பீட்டில் பழைய மாடலை விட 152 மிமீ கூடுதல் நீளம், 84 மிமீ கூடுதல் அகலம் கொண்டதாகவும், அதேவேளை உயரத்தில் 12மிமீ குறைவாகவும் இருக்கிறது.
இதனால், ஹெட்ரூம் மிக வசதியாகவும், பொருட்களை வைப்பதற்கு வசதியாக அதிக இடவசதி கொண்ட பூட் ரூமும் புதிய பீட்டிலுக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகளாக இருக்கிறது.
புதிய பீட்டிலில் வட்ட வடிவ ஹெட்லைட்டுடன் பை-செனான் டே டைம் ரன்னிங் லைட்டுகளுடன் இருப்பதால் பார்க்க படு கவர்ச்சியாக இருக்கிறது.
மேலும், புதிய பீட்டில் 3 எஞ்சின் மாடல்களில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிகிறது. 170 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும், 2.5 லிட்டர் எஞ்சின், 140 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 200 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு எஞ்சின் மாடல்களில் பீட்டில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதில்,2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஸாத் போன்று பீட்டிலை வைத்து தனது புளுமோஷன் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புளூமோஷன் தொழில்நுட்பம் குறித்த பிரச்சாரத்தையும் பீட்டிலை வைத்து வோக்ஸ்வேகன் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் புதிய பீட்டில் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








