இந்தியாவில் 3 டோர் வோக்ஸ்வேகன் அப் நடமாட்டம்

கடந்த செப்டம்பர் மாதம் பிராங்பர்ட் ஆட்டோ கண்காட்சியில் புத்தம் புதிய அப் ஹேட்ச்பேக் காரை வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது. பிரேசில், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் மார்க்கெட்டுகளில் இந்த காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய சந்தைக்காக 3 டோர் கொண்ட அப் காரும், இந்தியா உள்ளிட்ட சந்தைக்காக 5 டோர் கொண்ட அப் காரையும் வோக்ஸ்வேகன் வடிவமைத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் அப் காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, 3 டோர் கொண்ட அப் கார் மும்பையில் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புகைப்படம் ஒன்று என்டிடிவி கார்ஸ் அண்ட் பைக்ஸ் ஷோ ஃபேஸ்புக் பக்கத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 டோர் கொண்ட அப் காரை களமிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த 3 டோர் கொண்ட அப் கார் இந்திய சாலைகளில் வந்தது பற்றி ஆட்டோத் துறையினர் மத்தியில் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சோதனை நடத்துவதற்காக வந்திருக்கலாம் என்று கருதவும் முடியாது. ஏனெனில், இந்தியாவில் 3 டோர் கொண்ட கார் மாடல்களுக்கு மவுசு இல்லை என்பது வோக்ஸ்வேகனுக்கு தெரியும்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைப்பதற்காக வோக்ஸ்வேகன் இந்த காரை இறக்குமதி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருந்தாலும், அப் அறிமுகம் குறித்து வோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








