விபத்துக்களை தடுக்க புதிய டிடெக்டிவ் தொழில்நுட்பம்: வால்வோ கார்களில் விரைவில் அறிமுகம்

சாலைகளின் குறுக்கே திடீரென கடக்கும், மனிதர்கள் மற்றும் விலங்குகளால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக,நகரங்களில் இதுபோன்ற விபத்துக்கள் தினசரி நடக்கும் நிலை உள்ளது.இந்த விபத்துக்களில் சாலையை கடப்பவர் மட்டுமின்றி வாகனங்களில் வருவோரும் காயம் ஏற்படவும்,சில சமயம் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இதை கருத்தில்கொண்டு,சாலையில் திடீரென மனிதர்கள் அல்லது விலங்குகள் குறுக்கே வந்தால், அதுபற்றி முன்கூட்டியே கண்டறிந்து டிரைவரை எச்சரிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கார்களை வால்வோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த தொழில்நுட்பம் கொண்ட கார்களில் ரேடார் இணைப்புடன் இயங்கும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். கார் செல்லும் பாதையில், திடீரென குறுக்கே வரும் உருவங்களை ரேடார் முன்கூட்டியே கண்டறிந்து அதுகுறித்து டிரைவருக்கு வாய்மொழியாக எச்சரிக்கிறது.
இதன்மூலம், டிரைவர் காரின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தடுக்கலாம். எச்சரிக்கையையும் மீறி டிரைவர் காரை இயக்கினாலோ அல்லது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டாலோ, புதிய சாதனம் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் பிரேக்கை அழுத்தி காரை தானாக நிறுத்திவிடுகிறது.
வால்வோ அறிமுகப்படுத்தும் சாதனம் 30கி.மீ.வேகத்திற்கு மேல் கார் செல்லும்போது எச்சரிக்கை தரும் என்றாலும், அனைத்து வேக நிலைகளிலும் இது செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்நுட்பம் மூலம் கணிசமான விபத்துக்களை தடுக்க முடியும் என வால்வோ அடித்து கூறுகிறது.
XC60, S60 and V60 ஆகிய மாடல்களில் இந்த புதிய டிடெக்ட்டிவ் தொழில்நுட்பம் கொண்ட வசதி இருக்கும் என்று வால்வோ தெரிவித்துள்ளது. புதிய டிடெக்ட்டிவ் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது என்று வால்வோ கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








