லிட்டருக்கு 32 கிமீ செல்லும் சுஸுகி ஆல்ட்டோ ஈக்கோ அறிமுகம்

இந்தியாவில் ஏ-ஸ்டார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பிய நாடுகளில் ஆல்ட்டோ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே ஏ-ஸ்டார் கார் மத்திய கிழக்கு நாடுகளில் சுஸுகி செலிரியோ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மறு வடிவமைப்பு மற்றும் புதிய எஞ்சினுடன் ஜப்பானில் புத்தம் புதிய ஆல்ட்டோ ஈக்கோ(ஏ-ஸ்டார்) காரை சுஸுகி அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கார் அறிமுகம் குறி்த்து சுஸுகி வசமிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.
இந்த கார் புதிய 660சிசி பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த எஞ்சின் 6,000 ஆர்பிஎம் வேகத்தில் 52 பிஎச்பி ஆற்றலையும், 4,000 ஆர்பிஎம் வேகத்தில் 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்ட்டோ ஈக்கோ கார் லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் கொடுப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.
தவிர, 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களிலும் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மாருதி நிறுவனம் தற்போது புதிய 800 காரை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இந்த கார் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாருதி-800 காரில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஆல்ட்டோ ஈக்கோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 660சிசி எஞ்சின் பொருத்தபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சுஸுகியிடமிருந்தோ அல்லது மாருதி தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications