வைர, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட உலகின் காஸ்ட்லி கார்

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரை ஒத்த வடிவமைப்பை கொண்ட உலகின் மிக காஸ்ட்லியான பொம்மை காரை வடிவமைத்து அசத்தியுள்ளார் ஜெர்மனியை சேர்ந்த பிரபல வடிவமைப்பு நிபுணர் ராபர்ட் குல்பென்.
பார்ப்பதற்கு நிஜ லம்போர்கினி அவென்டெடார் காரைப்போல் அச்சு அசலாக இருந்தாலும் இந்த கார் அளவில், நிஜ காரைவிட அளவில் 8 மடங்கு சிறியது. ஆனால், மதிப்பில் நிஜ லம்போர்கினியை விட 12 மடங்கு அதிகம்.
இந்த விலை உயர்ந்த பொம்மை கார் குறித்து ராபர்ட் குல்பென் கூறியதாவது:
"ஆட்டமொபைல் துறையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இந்த காரை வடிவமைத்துள்ளேன்.
கார்பன் பைபர், 24 கேரட் தங்கம், வைர கற்கள் மற்றும் பிளாட்டினத்தை கொண்டு இந்த காரை தயாரித்துள்ளேன்.
இந்த பொம்மை காரின் இருக்கைகள், ஹெட்லைட் மற்றும் ஸ்டீயரிங் வீலில் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
காரில் பல பகுதிகளில் மிக மிக மெல்லிய தங்க இழை பதிக்கப்பட்டுள்ளது.
டயர்களின் ரிம்மின் உள்பக்கம் தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த காரின் ஒவ்வொரு இருக்கையிலும் வைரம் உள்ளிட்ட 700 விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
1.7 மில்லியன் பவுண்டு மதிப்பில் உருவாகப்பட்ட இந்த காரை வடிவமைப்பதற்கு எனக்கு 500 மணிநேரம் ஆனது," என்று கூறினார்.
இந்த விலை மதிப்பற்ற பொம்மை கார் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும், இந்த காரை 3 மில்லியன் பவுண்டுக்கு ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.22 கோடி மதிப்பில் தங்க நானோ காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








