பட்ஜெட்டில் வரி உயர்வு: கார்கள் விலை கணிசமாக உயர்கிறது

2012-13ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக டீசல் கார்களுக்கான வரி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பட்ஜெட்டில் அனைத்து ரக கார்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான சிறிய கார்கள் மீது தற்போது 10 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெரிய கார்கள் மீதான வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 4 மீட்டர் நீளத்துக்கும் அதிகமான நீளம் மற்றும் 1.5 லிட்டருக்கு மேலான திறன் கொண்ட கார்களை பெரிய கார்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரிய கார்களுக்கு அதன் விலையில் 22 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. தற்போது மத்திய பட்ஜெட்டில் பெரிய கார்கள் மீதான வரி 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரிய கார்களின் மீது 5 சதவீதம் வரி கூட்டப்பட்டிருப்பதால், இனி பெரிய கார்களின் விலை கணிசமாக உயர்கிறது.
மேலும், கார்கள் இறக்குமதிக்கான வரியும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது கார் விலையில் 60 சதவீதம் இறக்குமதியாக விதிக்கப்படுகிறது. தற்போது பட்ஜெட்டில் இந்த வரி 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரி இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








