காரில் கருப்பு கண்ணாடி: முதல்நாளில் 3,300 பேருக்கு அபராதம்

காரில் கருப்பு கண்ணாடி பொருத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கடந்த 19ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் 24 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
12 காவல் துறை துணை ஆணையர்கள் மேற்பார்வையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் முதல் நாளில் மட்டும் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார், வேனில் வந்த 3,300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அண்ணாசாலையில், பெரியார் சிலை அருகே நடந்த சோதனையில், கருப்பு கண்ணாடி கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், போலீசாரே கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு பேப்பரை அகற்றினர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா கூறுகையில்,"முதல் நாளில் மட்டும் 3,300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதல்முறை குற்றம் என்பதால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்த முறை கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். காரில் வந்த பலர் எங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து தெரியாது என்று கூறி மழுப்பினர். ஆனால், இந்த உத்தரவு குறித்து சென்னை முழுவதும் முக்கிய சாலைகளில் அறிவிப்பு பலகைகளை வைத்திருக்கிறோம்.
ஃபேஸ்புக், டுவிட்டரிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








