23,500கிமீ, 78 நாட்கள், நானோ காரில் 63வயது இளைஞரின் சாதனை பயணம்!
நானோ காரா... சிட்டியில ஓகே. ஆனா, ஓவர் ஆல் கொஞ்சம் யோசிக்கணும் என்று பலர் சலிப்பை கொட்டி வரும் நிலையில், கொச்சியை சேர்ந்த கார் பிரியர் ஒருவர் நானோ காரில் 23,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கொச்சியை சேர்ந்தவர் தாமஸ் சாக்கோ. வயது 63. கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தனது தீராத ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக காரில் சாதனை பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்கு நானோ காரை தேர்வு செய்தார். நானோ காரை அனைவரும் ஒதுக்குவதை கண்டு வருத்தமுற்றார். நீண்ட தூர பயணங்களுக்கு நானோ லாயக்கில்லை என்று எல்லோரும் கூறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இதன் மூலம் வழிபிறக்கும் என்பதை பயணத்தின் நோக்கமாக கொண்டு களமிறங்கினார்.

நாடு முழுவதும் நெடிய பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்த அவர் சிறிதும் தாமதிக்கவில்லை. கடந்த மே மாதம் 3ந் தேதி மும்பையில் தனது பயணத்தை துவங்கினார். மாநிலங்களின் தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்கள், இரண்டாம் நிலையில் உள்ள 100 நகரங்கள் வழியாக நானோ காரில் தனது பயணத்தை தொடர்ந்தார். அது மட்டுமின்றி நாட்டின் கிழக்கு முனையான தவாங், தெற்கே கன்னியாகுமரி, மேற்கே துவாராகா, வடக்கில் லடாக் என அனைத்து பகுதிகளிலும் நானோ மூலம் தடம் பதித்தார். நாட்டின் மத்திய பகுதியாக கருதப்படும் நாக்பூரிலும் தடம் பதித்துவிட்டார்.
மேலும், உலகின் அதி உயரமான வாகன போக்குவரத்து கொண்ட சாலை பகுதியான தங்லாங் லா பகுதியையும் தொட்டுவிட்டு திரும்பியுள்ளார் தாமஸ். பலவாறான தட்பவெப்பம், சமவெளி பகுதிகள், மலைப்பாங்கான சாலை என அனைத்து பகுதிகளையும் நானோவில் கடந்து கடந்த 21ந் தேதி தனது சாதனை பயணத்தை முடித்துள்ளார் இந்த 63 வயது இளைஞர். அதுவும் தன்னந்தனியாக, நானோவை மட்டும் நம்பி.
நாடு முழுவதும் மொத்தம் 23,500 கிமீ தூரத்தை கடந்த அவர் 78 நாட்களில் இந்த சாதனை பயணத்தை நிறைவு செய்துள்ளார். நானோ கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார் என்பதால் எந்தவொரு சாலையிலும் சிறப்பாக பயணிக்க முடியும் என்று கருதியே தேர்வு செய்ததாகவும், காரை பொறுத்தவரை எந்த பிரச்னையும் தராமல் தனது பயணத்தை நிறைவு செய்ததாக மனநிறைவு தெரிவித்துள்ளார் தாமஸ் சாக்கோ.


Click it and Unblock the Notifications








