மஹிந்திரா குழுமத்தின் புதிய தலைவராகிறார் ஆனந்த் மஹிந்திரா!

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக மஹிந்திரா நிறுவனம் திகழ்கிறது. வாகன தயாரிப்பு துறையில் முன்னோடி நிறுவனமான மஹிந்திரா தற்போது ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி சேவை, சுற்றுலாத் துறை என ஏராளமான துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வயது முதிர்வை காரணம் காட்டி ஓய்வு பெற கேசுப் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 1963ம் ஆண்டு முதல் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக கேசுப் மஹிந்திரா பதவி வகித்து வருகிறார். இவரது தலைமையில் பல புதிய மைல்கற்களை மஹிந்திரா எட்டியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மஹிந்திரா குழுமத்தின் ஆண்டு கூட்டத்தில் தனது ஓய்வு அறிவிப்பை கேசுப் மஹிந்திரா முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையடுத்து, மஹிந்திரா குழுமத்தின் புதிய தலைவராக ஆனந்த் மஹிந்திரா பதவியேற்கிறார்.
தற்போது மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவராக ஆனந்த் மஹிந்திரா பதவி வகித்து வருகிறார். இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறுகையில்,"மஹிந்திராவின் பிர்ம்மாண்ட வளர்ச்சியில் எனது மாமாவின்(கேசுப் மஹிந்திரா) பங்கு அளப்பரியது.
அவர் ஓய்வு பெற்றாலும் கூட, தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார். அவரது மதிப்பு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படியும், மஹிந்திரா குழுமம் புதிய உச்சங்களை எட்டும்," என்று ஆனந்த் மஹிந்திரா கூறினார்.


Click it and Unblock the Notifications








