ஜூன் மாத விற்பனையில் பிஎம்டபிள்யூவை முந்திய ஆடி

கடந்த மாதம் பிஎம்டபிள்யூ 750 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஆடி 759 கார்களை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்து விட்டது. கடந்த இரு மாதங்களாக விற்பனையில் ஆடி முதலிடத்தை பிடித்து வருவதால் அந்த இடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூ அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக விற்பனையில் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், இதேநிலை வரும் மாதங்களில் தொடர்ந்தால் முதலிடத்தை ஆடியிடம் நிரந்தரமாக பறிகொடுத்துவிட்டு இரண்டாம் இடத்தை தக்க வைக்க பிஎம்டபிள்யூ பென்சுடன் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், இந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியுற்ற பிஎம்டபிள்யூ தலைமையகம் இந்திய பிரிவு தலைவர் ஆன்ட்ரியாஸ் ஷாஃபை அதிரடியாக மாற்றிவிட்டது. ஆடியை சமாளிக்க புதிய தலைவரை அந்த நிறுவனம் நியமித்துள்ளது.
வரும் 2014ம் ஆண்டில் முதலிடத்தை பிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாக ஆடி தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதே இந்திய சொகுசு கார் மார்க்கெட்டின் ஹீரோவாகிவிட்டது ஆடி. வோக்ஸ்வேகனின் சொகுசு கார் பிராண்டான ஆடி இந்திய மார்க்கெட்டில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.
மேலும், காலம் காலமாக இருந்து வரும் பென்ஸ் பிராண்டின் பிரபலத்தையும், பிஎம்டபிள்யூ கார்களின் மதிப்பையும் அடித்து நொறுக்கி முன்னேறி வருகிறது ஆடி கார் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








