குண்டு துளைக்காத கார் மார்க்கெட்டில் களமிறங்கும் ஆடி நிறுவனம்

ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு கார் நிறுவனம் இந்தியாவில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது ஏ8 எல் குண்டுதுளைக்காத காரை சில விஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து காட்டியுள்ளது.
மேலும், அவர்களுக்கு காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களை எப்படி இயக்குவது என்பது குறித்து அவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தி காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் அங்கு வந்த விஐபிக்கள் பலரையும் கவர்ந்தது. இந்த காரை வாங்குவதற்கு அரசுத்துறை வட்டாரங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களிடமிருந்து ஏக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் ஏ80-எல் குண்டு துளைக்காத காரை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது. இந்த காரை அனைத்து அரசுத்துறையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கும், பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
குண்டு துளைக்காத காரின் விற்பனையை ஜெர்மனியிலுள்ள ஆடியின் தலைமையகம் நேரடியாக கவனித்துக்கொள்ளும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அம்சங்களுடன் வரும் இந்த காரின் விலை ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை இருக்கும்.
இந்த காரில் மல்டி லேயர் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டால் கூட இந்த காருக்கு சிறு சேதாரம் கூட ஏற்படாது. மேலும், ரசாயண தாக்குதல்களிலிருந்தும் பயணிகளை காக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த காரின் கீழ்பாகம் ஸ்பெஷல் அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், குண்டு வெடித்தால் கூட இந்த கார் துளிகூட சேதாரம் அடையாது. மேலும், இந்த காரின் ஒவ்வொரு கதவும்ம் 160கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இதுதவிர, அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும் என்பதால், அவசர காலங்களில் பயணிக்கும் நபர் எளிதாக பிறரை தொடர்பு கொள்ள முடியும். மேலும், இந்த காரில் தற்காப்பு வசதிக்காக நவீன ஆயுதங்களும் பொருத்தப்பட்டிருக்கும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








