டிவி, ப்ரிட்ஜ் போல கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: அடுத்த ஆண்டு முதல் அமல்

மத்திய அரசின் கீழ் இயங்கும் எரிசக்தி சேமிப்பு அமைப்பு(பிஇஇ) இதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது.அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஸ்டார் ரேட்டிங் லேபிள்களுடன் கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமலுக்கு வர இருக்கிறது.
இந்த புதிய தர வரிசை மூலம் கார்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு இலகுவான இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த ஓரிரு மாதங்களில் கார் நிறுவனங்களே தாமாகவே முன் வந்து ஸ்டார் ரேட்டிங் லேபிள்களுடன் தங்களது கார்களை அறிமுகப்படுத்த துவங்கும் என பிஇஇ தெரிவித்துள்ளது.
இதுதவிர, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கார்களை குறிப்பிட்ட தர வரிசைக்குள் கொண்டு வரும் அளவுக்கு எரிபொருள் சிக்கனம் தரும் எஞ்சின்களை மட்டுமே தயாரிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட எரிபொருள் சிக்கனம் தராத தயாரிப்புகள் விற்பனைக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு விதிமுறைகள் இறுக்கப்படும் என்றும் தெரிகிறது.
பிஇஇ அமைப்பின் அதிகாரி அஜய் மாத்தூர் கூறுகையில்,"இந்த புதிய முறை மூலம் எந்தவொரு நிறுவனத்தின் தயாரிப்புகளையும் பொதுவான சோதனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தபடும். எனவே, கார் நிறுவனங்கள் போலியான மைலேஜ் விபரங்களை அளிக்க முடியாது.
5 புள்ளிகளின் அடிப்படையில் கார்களுக்கு தர வரிசை நிர்ணயிக்கப்படும். 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் கார்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் கார்களாக இருக்கும்.
இதற்காக, ஒவ்வொரு காரும் 100கிமீ தூரம் ஓட்டி சோதனை செய்யப்படும். 100கிலோமீட்டர் செல்வதற்கு 7 லிட்டர் எடுத்துக்கொள்ளும் காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.
100 கிலோமீட்டர் செல்ல 7 முதல் 9 லிட்டர் எரிபொருள் செலவாகும் காருக்கு 4 ஸ்டார் ரேட்டிங்கும், 9 முதல் 11 லிட்டர் செலவாகும் காருக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கும், 11 முதல் 12 லிட்டர் எடுத்துக்கொள்ளும் காருக்கு 2 ஸ்டார் ரேட்டிங்கும், 12 லிட்டருக்கு மேல் எடுத்துக்கொள்ளும் காருக்கு 1 ஸ்டார் ரேட்டிங்கும் அளிக்கப்படும்," என்றார்.
நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 330க்கும் மேற்பட்ட கார் மாடல்களில் 32 கார்கள் மட்டும் 5 ஸ்டார் ரேட்டிங்கும், 52 கார் மாடல்கள் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








