ஆசைப்பட்டு அரசு பணத்தில் புதிய சொகுசு கார் வாங்கிய மேற்குவங்க கவர்னர்

அரசியல் தலைவர்களும், ஆளும் வர்க்கத்தினரும் சொகுசு கார் வைத்திருப்பது புதிதல்ல. ஆனால், ஒரு மாநிலத்தின் கவர்னர் இத்தகைய காஸ்ட்லி காரை வாங்குவது இதுவே முதன்முறை.
இதுவரை டொயோட்டா கேம்ரி காரை கவர்னர் எம்.கே.நாராயணன் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், டொயோட்டா கேம்ரிக்கு பதில், பிஎம்டபிள்யூ கார் வேண்டும் அதிகாரிகளிடம் நாராயணன் விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, அம்மாநில அரசிடம் கவர்னர் மாளிகை வேண்டுகோள் வைத்தது. இதற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலையசைக்கவே கவர்னருக்கு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய காரில் கவர்னர் நாராயணன் நேற்று வந்தபோது பத்திரிக்கை கேமரா கண்ணில் சிக்கினார்.
நிதி நெருக்கடியில் இருக்கும் மேற்கு வங்க அரசு கவர்னருக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்க அனுமதி கொடுத்தது அரசியல் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் அரசுத் துறையினர் அம்பாசடர் மற்றும் மாருதி கார்களை மட்டுமே வாங்குவதற்கு சமீபத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கவர்னர் நாராயணனுக்கு வாங்கப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மிகக் குறைந்த விலை கொண்ட 523ஐ பெட்ரோல் கார் ரூ.39 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், கவர்னருக்கு ரூ.45 லட்சத்தில் கார் வாங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அவர் 530டி காரை தேர்வு செய்து வாங்கியிருப்பதாக தெரிகிறது. இந்த கார் ரூ.45.9 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் 245 பிஎச்பி ஆற்றலையும், 540என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், தாராள இடவசதி கொண்ட கேபின், கண்ணை கவரும் உள்ளலங்காரம் என ஏராளமான அம்சங்களை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








