அடுத்தடுத்து குறைந்த விலையில் சொகுசு கார்கள்: பென்ஸ் அறிவிப்பு

அடுத்த வரும் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்துக்குள் அடுத்தடுத்து புதிய கார்களை வரிசை கட்ட இருப்பதாக பென்ஸ் தெரிவித்துள்ளது. முதலாவதாக, அடுத்த ஆண்டு ரூ,20 லட்சத்துக்குள் புதிய ஏ கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது. தொடர்ந்து ஏ கிளாஸ் காரின் பிளாட்பார்மில் வடிமவமைக்கப்படும் என்ட்ரி லெவல் எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டுக்குள் ஏராளமான குறைந்த விலை கொண்ட பிரிமியம் கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸின் இந்தியப் பிரிவு தலைவர் பீட்டர் ஹோனெக்கிடம் எதிர்கால திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,"எங்களது விற்பனை கொள்கைகளை பெரிய அளவில் மாற்றம் செய்து வருகிறோம்.
குறைந்த விலையில் அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். 2015-16ம் ஆண்டில் எங்களது 40 சதவீத மாடல்களை எடுத்துக் கொண்டால் ரூ.25 லட்சத்துக்குள் குறைவான கார் மாடல்களாகவே இருக்கும்.
ஏனெனில், 30 லட்சத்துக்குள் விலை கொண்ட பிரிமியம் கார்களின் விற்பனை வெகுவாக அதிகரித்து வருகிறது. புதிய மாடல்கள் மூலம் நிச்சயம் மார்க்கெட் பங்களிப்பு அதிகரிக்கும். அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல முதலிடம் என்ற நம்பர் கேமையும் மனதில் வைத்தே எங்களது திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறோம்.
புதிய கார்களை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரு ஆண்டுகளில் உற்பத்தி பிரிவுக்காக மட்டும் ரூ.240 கோடியை முதலீடு செய்வோம்," என்றார்.
இந்தியாவில் டெய்ம்லரின் சர்வதேச பார்ட்னரான ரினால்ட் நிறுவனத்திடமிருந்து சிறிய எஞ்சின்களின் சப்ளை பெறுவதற்கு திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு," எதிர்காலத்தில் அதுபற்றியும் பரிசீலிக்கப்படும். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை," என்றார்.
சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர் -1 இடத்தில் இருந்த பென்ஸ் சந்தை போட்டியில் பின்தங்கிவிட்டது. பிஎம்டபிள்யூ, ஆடி கார் நிறுவனங்களிடம் தனது இடத்தை விட்டுவிட்டு தற்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் விதமாக நம் நாட்டு மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு குறைந்த விலை கார்கள் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது பென்ஸ். மேலும், கடந்த மாதம் ரூ.21.49 லட்சம் என்ற சவாலான விலையில் பி கிளாஸ் காரை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.
பென்ஸின் குறைந்த விலை கார்கள் என்ற மாஸ்டர் பிளான் பிஎம்டபிள்யூ, ஆடி கார் நிறுவனங்களுக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றன. பென்ஸ் நிறுவனத்தின் வியூகத்தை பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய போட்டியாளர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








