சென்னை ஆலையில் 25,000வது கார் உற்பத்தி: பிஎம்டபிள்யூ மகிழ்ச்சி

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ சென்னையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த ஆலையில்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த கார்கள் தயாரிக்கப்பட்டு நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ஆலையில் நேற்று 25,000வது கார் உற்பத்தி பிரிவிலிருந்து தயாரித்து வெளியே வந்தது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ மேலாண் இயக்குனர் ஜூர்ஜென் எடர் வெளியிட்ட அறிக்கையில்," குறுகிய காலத்தில் இந்த உற்பத்தி சாதனை எட்டப்பட்டுள்ளது. ஆலை செயல்பாட்டுக்கு வந்து ஆண்டுகளில் இதுவரை 25,000 கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு இந்த ஆலை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த புதிய மைல்கல்லை எட்ட உறுதுணையாக இருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.
சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் கார்களும், எக்ஸ்1 மற்றும் எக்ஸ்3 ஆகிய எஸ்யூவி ரக கார்களும் தயாரிக்கப்படுகிறது.
சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்து வரும் பிஎம்டபிள்யூவுக்கு ஆடி ரூபத்தில் ஆபத்து வந்துள்ளது. இதனால், இறுக்கமான மனதுடன் இருந்து வரும் அந்த நிறுவனத்துக்கு உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பது சற்று ஆறுதல் தரும்.


Click it and Unblock the Notifications








