வரி உயர்வை வாடிக்கையாளர் தலையில் கட்ட கார் நிறுவனங்கள் முடிவு!

மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து ரக கார்களுக்கும் கலால் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, கார் வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய கார்கள் மீதான கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறிய கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.4,000 முதல் ரூ.20,000 வரை உயர்கிறது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில்," அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தவுள்ளோம். வரி உயர்வை அப்படியே வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.
ஏற்கனவே, பல்வேறு காரணங்களால் கார் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரி உயர்த்தப்பட்டுள்ளதால் கார் விற்பனையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்," என்றார்.
இதே கருத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கோ கூறியுள்ளார். மேலும், இப்போதுள்ள சூழ்நிலையில் வரி உயர்வில் பங்கெடுக்கும் அளவுக்கு எங்களது நிலை இல்லை. உற்பத்தி செலவீனங்கள் கடுமையாக உயர்ந்திருப்பதால், கார்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை," என்றார்.
ஹோண்டா கார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் ஸென்னும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். வரி உயர்வில் கார் நிறுவனங்கள் பங்கெடுக்காது என்பதால், அனைத்து சுமையும் வாடிக்கையாளர்கள் தலையில் விழுகிறது. மேலும், இன்று இரவு முதலே கார்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








