கூடுதல் நகரங்களில் பிஎஸ்4 விதியை அமல்படுத்த கோரிக்கை

நாட்டின் 13 முக்கிய நகரங்களில் மட்டும் தற்போது பிஎஸ்4 எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. விரைவில் 7 நகரங்களி்ல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற நகரங்களில் பிஎஸ்-3 மாசுக் கட்டுப்பாட்டு விதி அமலில் உள்ளது.
இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்3 என இரண்டு விதமான மாடல்களில் வாகனங்களை தயாரிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக, இரண்டு உற்பத்தி பிரிவுகளை வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதை தவிர்க்கும் விதமாக நாட்டின் பிற நகரங்களிலும் பிஎஸ்4 விதியை விரைவாக அமலுக்கு கொண்டு வருமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஜோஷி தலைமையில் சமீபத்தில் கூட்டம் நடந்தது. இதில், மாருதி, டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்4 மாசுக்கட்டுப்பாட்டு விதியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இது தற்போது சாத்தியப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், பிஎஸ் 4 விதிமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் நகரங்களில் உயர்தர பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்பட வேண்டும். இதற்காக, 50,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் உடனடியாக இது சாத்தியப்படாது என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








