உதிரிபாகங்கள் மீது கொள்ளை விலை: கார் நிறுவனங்களுக்கு சிசிஐ நோட்டீஸ்

கார்களுக்கான உதிரிபாகங்களை சில கார் நிறுவனங்கள் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்கின்றன. ஆஃப்டர் மார்க்கெட் எனப்படும் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்படாத சந்தையில் இந்த உதிரிபாகங்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியாது.
இதனை பயன்படுத்தி கார் நிறுவனங்கள் உதிரிபாகங்களை மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தவிர, டீலர்களும் உதிரிபாகங்கள் மீது தங்கள் பங்குக்கு கூடுதல் விலையை வைத்து விற்பதாக கூறப்படுகிறது. வெளியில் வாங்க முடியாது என்பதால் டீலர்கள் சொல்லும் விலையை கொடுத்துவிட்டு போகும் நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
இதுபோன்று கொள்ளை விலை வைத்து உதிரிபாகங்கள் விற்பனை செய்வது தொடர்பாக சிசிஐ அமைப்புக்கு ஏராளமான புகார்கள் வந்தன. கார் நிறுவனங்கள் மீதான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிசிஐ அமைப்பின் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய டைரக்டர் ஜெனரல் தனது விசாரணை அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, புகார்கள் குறித்து விளக்கமளிக்குமாறு 17 கார் நிறுவனங்களுக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், வெளிநாட்டு கார் நிறுவனங்கள் மீதே அதிக அளவில் புகார்கள் வந்திருக்கின்றன. இந்த புகார்கள் தொடர்பாக கார் நிறுவனங்களின் விளக்கங்களை பெற்ற பின்னர் அடுத்த மாதம் விசாரணை துவங்கும் என சிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








