சென்னையில் கருப்பு கண்ணாடி கார்களுக்கு அபராதம்: போலீஸ் நடவடிக்கை துவங்கியது

குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனப்படும் கருப்பு பேப்பரை கடந்த 19ந் தேதிக்குள் நீக்கிவிட வேண்டும் என்று கெடு விதித்தது.
ஆனால், சென்னையில் இரு நாட்களுக்கு முன்னதாகவே கடந்த வியாழக்கிழமை முதலே இந்த தடை அமலுக்கு வந்தது. கார் கண்ணாடியில் கருப்பு பேப்பர் ஒட்டியிருந்தால் உடனடியாக நீக்கி விடுமாறு போலீசார் வாகன உரிமையாளர்களை அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று கருப்பு கண்ணாடியுடன் கார் மற்றும் வேனில் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும், சில இடங்களில் போலீசாரே கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு பேப்பரை கிழித்து எடுத்தனர்.
போலீஸ் நடவடிக்கையில் பாரபட்சம்?
இதனிடையே, புதுச்சேரியில் கருப்பு கண்ணாடியுடன் வரும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் கார்களை போலீசார் கண்டுகொள்ளாமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜகவின் புதுவை மாநில செயலாளர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து புதுச்சேரியில் கார், வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களில் போலீசார் கார் கண்ணாடிகளில் கருப்பு பேப்பர்களை அகற்றி வருகின்றனர்.
ஆனால், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அகற்றாமல் போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதே.
இந்த விஷயத்தில் போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடந்து கொண்டால்தான் குற்றச் செயல்களை தடுக்க முடியும்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








