கார்களில் திரைச் சீலை போட்டுக் கொள்ள தடையில்லை: போலீசார் அறிவிப்பு

சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் கார்களில் கருப்பு கண்ணாடி பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை உரிமையாளர்கள் அகற்றி வருகின்றனர்.
தடையை மீறுவோருக்கு ரூ.100 அபராதம் விதிப்பதோடு, சில இடங்களில் போலீசாரே கருப்பு பிலிம்களையும் அகற்றி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கார்களில் கருப்பு கண்ணாடி இல்லாதது பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகளை உருவாக்கியுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காருக்குள் இருக்கும் பொருட்கள் திருடு போகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பாதுகாப்பு கருதி சிலர் கார்களில் திரைச் சீலை போட்டு மறைத்துள்ளனர்.
இதுபோன்று திரைச் சீலை போட்டு வரும் கார்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்களில் கருப்பு கண்ணாடிக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திரைச் சீலை போட்டுக் கொள்ள எந்த தடையுமில்லை. 1989ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களில் திரைச் சீலை பயன்படுத்துவதை தவறாக குறிப்பிடவில்லை. எனவே, திரைச் சீலை பயன்படுத்துவதை போலீசார் அகற்றமாட்டார்கள் என்று கூறினார்.
மேலும், சென்னையில் இதுவரை கருப்பு கண்ணாடியுடன் வந்த கார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.53,33,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








