குறைந்த விலை கார்களுக்கான புதிய தட்சன் பிராண்டு: நிசான் அறிமுகம்

ஜப்பானிய நிறுவனமான நிசான் இந்தியாவில் மைக்ரா மற்றும் சன்னி கார்களை விற்பனை செய்து வருகிறது. மைக்ராவை விட குறைந்த விலையில் புதிய கார்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலை கார்களை தனது பிராண்டில் வெளியிட அந்த நிறுவனம் விரும்பவில்லை. இதனால், தனது பிராண்டு மதிப்பு போய்விடும் என்று கருதியது.
குறைந்த விலை கார்களுக்காக புதிய பிராண்டை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில், ஏற்கனவே கைவிடப்பட்ட தனது தட்சன் பிராண்டை மீண்டும் நிசான் நேற்று அறிமுகம் செய்துள்ளது.
மும்பையில் நேற்று நடந்த விழாவில் நிசான் இந்தியா தலைவர் கிமிநோபு தொகுயாமா தட்சன் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தார். தட்சன் பிராண்டுக்கான லோகோவும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
தட்சன் பிராண்டு இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலான குறைந்த விலை பிராண்டாக இருக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது. இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா ஆகிய வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளை மனதில்கொண்டு புதிய தட்சன் பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
வரும் 2014ம் ஆண்டு முதல் தட்சன் பிராண்டில் ரூ.4 லட்சத்திற்கும் குறைவான புதிய கார்கள் மாடல்களை நிசான் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








