முதலீடு செய்ய தயங்கும் சப்ளையர்கள்: டீசல் நானோ வருவதில் தாமதம்

கடந்த 2009ம் ஆண்டு நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் மார்க்கெட்டை அதகளப்படுத்தி விற்பனைக்கு வந்தது நானோ.
பெரும் எதிர்பார்ப்புடன் முதல்கட்ட புக்கிங் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால், விற்பனைக்கு வந்து சில மாதங்களிலிருந்து நானோ மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர் இழந்தனர். மேலும், தீப்பிடித்து எரிந்த சம்பவங்களும் நானோ கார் விற்பனையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றது.
இந்த நிலையில், நானோவை நம்பி அதற்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்த நிறுவனங்கள் அதிக முதலீடுகளை செய்துவிட்டன. ஆனால், எதிர்பார்த்தபடி நானோ விற்பனையாகாததால் சப்ளையை குறைத்தது டாடா. இதனால், அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில், டீசல் நானோவை வரும் டிசம்பருக்குள் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 40 கிமீ வரை செல்லும் என்று தகவல்கள் தெரிவிப்பதால், டீசல் நானோ மீதும் பழையபடி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், ஏற்கனவே நானோவை நம்பி கையை சுட்டுக்கொண்ட சப்ளையர்கள் டீசல் நானோவுக்கு அதிக முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். மேலும், டாடா எதிர்பார்க்கும் தரத்துக்கும், கொடுக்கும் பணத்துக்கும் கட்டுப்படியாகாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், டீசல் நானோவுக்கான உதிரிபாகங்கள் சப்ளையில் தடங்கல் ஏற்படும் நிலை இருப்பதால், டீசல் நானோ விற்பனைக்கு வருவதில் கால தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் டீசல் நானோ அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில்தான் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








