டீசல் விலை உயர்வால் கார் விற்பனை பாதிக்கப்படுமா?

பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு ஆகியவற்றால் கார் மார்க்கெட் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டதால், கார் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்காக டீசலுக்கு மானியம் வழங்கப்படுவதால், பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.30 வரை குறைவாக இருந்து வந்தது.
இதனால், டீசல் கார் விற்பனை சக்கைபோடு போட்டு வந்தது. தவிர, டீசல் கார்கள் அதிக மைலைஜ் தருவதும் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் டீசல் கார்கள் மீது திரும்பியது. இதனால், கடந்த ஓர் ஆண்டாக டீசல் நுகர்வு கணிசமாக அதிகரித்ததால், டீசலுக்கு கூடுதல் மானியம் வழங்கும் நிலை ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது.
இதனை சமாளிக்க டீசல் கார்கள் மீது 2.5 லட்சம் வரை கூடுதல் வரி விதிக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது கார் மார்க்கெட்டை பெரும் பாதாளத்தில் தள்ளிவிடும் என கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேவேளை, நிதிச் சுமையை குறைத்துக்கொள்ள டீசல் விலையை சிறிதளவு உயர்த்தலாம் என கருத்து தெரிவித்தன.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் டீசல் விலையை ஒரே மூச்சில் ரூ.5 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதனால், டீசல் கார் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால், டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பெட்ரோல் விலை இன்னமும் ரூ.20 வரை கூடுதலாக இருக்கிறது. மேலும், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5.50 வரை மத்திய அரசு குறைத்துள்ளதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.
எனவே, கார் விற்பனையில் உடனடியாக பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கருதப்படுகிறது. மேலும், டீசல் விலை உயர்வை ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வரவேற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








