மாருதி ஆலையில் மீண்டும் போராட்ட மேகங்கள்!

கடந்த ஜூலை மாதம் மாருதியின் மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் மூத்த அதிகாரி உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களாக கருதி 500 தொழிலாளர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது மாருதி.
இந்த நிலையில், டிஸ்மிஸ் ஆன தொழிலாளர்களில் பலருக்கு இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரியும் தொழிற்சங்கங்கள் வற்புறுத்தி வருகின்றன. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக 200 தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 500 பேரை மாருதி நீக்கியது ஒருதலைபட்சமான முடிவு என தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், அங்கு பேரணியையும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், மானேசர் மற்றும் குர்கான் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாருதியின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமான மாருதி உத்யோக் கம்கார் சங்க பொதுச் செயலாளர் குல்தீப் ஜங்க்," டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்போம்.
ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறையிடம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுவோம். அதேவேளை, நாளை நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்," என்றார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்கள் நடத்தும் உண்ணாவிரதம் மற்றும் பேரணியில் பிற ஆலைகளை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








