டஸ்ட்டர், எக்ஸ்யூவி, எர்டிகாவுக்கு எக்கச்சக்க டிமான்ட்..!!

நம் நாட்டில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் மனப்போக்கு வெகுவாக மாறி வருகிறது. குட்டிக் கார்களிலிருந்து வாடிக்கையாளர்களின் கவனம் மெல்ல பெரிய கார்களின் பக்கம் திரும்பியுள்ளது. இடவசதி, பாதுகாப்பு வசதிகள் மற்றும் நிறைந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைப்பதால் கொஞ்சம் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர்.
குறிப்பாக, யுட்டிலிட்டி ரகத்தை சேர்ந்த எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், தேவையையும் சரியாக பூர்த்தி செய்கின்றன. எனவே, இந்த ரகத்தில் புதிதாக வந்திருக்கும் ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி மற்றும் மாருதி எர்டிகா ஆகிய கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை மாத்திலேயே கிட்டதட்ட 10,000 புக்கிங்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. இதனால், டஸ்ட்டர் உற்பத்தி வெகுவாக கூட்டியிருக்கிறது ரினால்ட். இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகவுள்ள நிலையில், அதற்கான தேவை மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. நேற்றுதான் அறிமுகம் செய்யப்பட்டது போன்று அப்படியொரு டிமான்ட். இதுவரை 2 முறை எஸ்யூவியின் உற்பத்தியை கூட்டியும் தேவை குறைந்தபாடில்லை. உள்நாட்டில் அதிக டிமான்ட் இருப்பதால் வெளிநாட்டு அறிமுகங்களையும் தள்ளி வைத்து வருகிறது மஹிந்திரா.
இதேபோன்று, மாருதியின் புதிய எம்பிவி ரக காரான எர்டிகாவும் புக்கிங்கை சளைக்காமல் தொடர்ந்து குவித்து வருகிறது. ஸ்விப்ட், டிசையர் உள்ளிட்ட கார்களை விட கூடுதல் நபர்கள் பயணம் செய்யலாம் என்பது எர்டிகாவின் பலம். ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி இழந்த நிலையில் மாருதியின் விற்பனையில் எர்டிகா முக்கிய பங்களிப்பை கொடுத்து அந்த நிறுவனத்தின் விற்பனை சரிவை ஓரளவு தவிர்த்துள்ளது.
யுட்டிலிட்டி கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிய யுட்டிலிட்டி ரக கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. இதனால், விலை நிர்ணயத்தில் தற்போது அனைத்து நிறுவனங்களும் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றன.
மார்க்கெட் போட்டி நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பயனாக அமைந்தால் சரிதான்..!


Click it and Unblock the Notifications








