இறக்குமதி காருக்கு ரூ.22 லட்சம் பதிவு கட்டணம்: எர்ணாகுளம் ஆர்டிஓவுக்கு ஜாக்பாட்

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் பதிவு கட்டணம் வசூல் செய்வதில் முன்னிலை வகிக்கிறது. அங்கு அதிக அளவில் தொழிலதிபர்கள் இருப்பதால் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஆடம்பர கார்களை அடிக்கடி காண முடியும்.
மேலும், அங்குள்ள தொழிலதிபர்கள் கார்களை இறக்குமதி செய்து வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த அந்த கார்களை பதிவு செய்யும்போது கணிசமான பதிவு கட்டணம் செலுத்தப்படுவதால், பதிவு கட்டண வசூலில் எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகம் முன்னிலை வகிக்கிறது.
பிரபல ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரி குழுமத்தினர் பிரிட்டனில் இருந்து சமீபத்தில் ரூ.2.5 கோடி விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தனர். இந்த காரை பதிவு செய்வதற்காக 15 ஆண்டுக்கான சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.22.22 லட்சத்தை எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு செலுத்தியுள்ளனர்.
இதேபோன்று, எர்ணாகுளத்தை சேர்ந்த பிரபல கல்வி குழுங்களின் தலைவரான டாக்டர் ஜிபிசி.நாயர் இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ.4.7 கோடி விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். அந்த காரை பதிவு செய்வதற்காக ரூ.24.39 லட்சத்தை அவர் கட்டணமாக எர்ணாகுளம் ஆர்டிஓவு அலுவலகத்துக்கு செலுத்தியுள்ளார்.
ஓரியண்டல் டிம்பர்ஸ் அதிபர் அஸ்ரப் ரஷீது சமீபத்தில் யமஹா ஒய்இசட்எஸ் ஆர்1 சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கை பதிவு செய்ய அவர் ரூ.75,000ஐ கட்டணமாக செலுத்தியுள்ளார். இதுபோன்று, எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஆடம்பர கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகம் ரூ.25 கோடி அளவுக்கு வாகன பதிவு கட்டணமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








