இந்தியாவுக்கு ஜீப் பிராண்டை உறுதிப்படுத்திய ஃபியட்
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதை ஃபியட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்லர் கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜீப் பிராண்டு எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. கிறிஸ்லரை ஃபியட் கையகப்படுத்தியதால் ஜீப் பிராண்டும் தற்போது ஃபியட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் எஸ்யூவி கார் மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபியட் முடிவு செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதமே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், இந்தியாவில் ஜீப் பிராண்டு வருவதை ஃபியட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செர்ஜியோ மார்க்கியோன் உறுதிப்படுத்தியுள்ளார். பாரிஸ் மோட்டார் ஷோவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
ஜீப் கிராண்ட் கெரோகே, ஜீப் ரேங்லர்,ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் பேட்ரியாட் ஆகிய எஸ்யூவி மாடல்களை ஃபியட் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி கார்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் வரலாம்.
எனவே, டொயோட்டா பார்ச்சூனர், செவர்லே கேப்டிவா உள்ளிட்ட வெளிநாட்டு எஸ்யூவி மாடல்களுக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா சஃபாரி ஸ்ட்ராம் ஆகிய உள்நாட்டு எஸ்யூவி மாடல்களுக்கும் கடும் போட்டியை கொடுக்கும்.
மேலும்,இந்திய மார்க்கெட்டில் தடுமாறி வரும் ஃபியட் நிறுவனத்துக்கு ஜீப் பிராண்டும் விற்பனையில் முட்டுக் கொடுக்கும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








