யமுனா விரைவு நெடுஞ்சாலை: உ.பி முதல்வர் அகிலேஷ் திறந்து வைத்தார்

டெல்லியிலிருந்து ஆக்ராவை இணைக்கும் விரைவு சாலை திட்டம் உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியின்போது வரையறுக்கப்பட்டது. இதன்படி, பணிகள் விறுவிறுப்பாக துவங்கின. இதற்காக, விவசாயிகளின் நிலம் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதற்கும், கூடுதல் இழப்பீடு வழங்கவும் பல எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. விவசாயிகள் மீது போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பல இடையூறுகளை கடந்த இந்த விரைவு சாலைப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.
ரூ.13,300 கோடி முதலீட்டில் இந்த விரைவு சாலையை பார்முலா ஒன் கார் பந்தய களத்தை அமைத்த ஜேபி கட்டுமான நிறுவனம்தான் அமைத்துள்ளது. 6,175 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த விரைவு சாலை 6 வழிப் பாதை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. 165 கிமீ தூரம் கொண்டது.
இந்த நிலையில், பணிகள் முடிவடைந்து பொது பயன்பாட்டிற்காக இந்த சாலை நேற்று திறக்கப்பட்டது. உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த சாலையை லக்ணோவில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பொத்தானை அழுத்தி விரைவு சாலையை திறந்து வைத்தார்.
வரும் 15ந் தேதி சுதந்திர தினம் வரை இந்த சாலையில் செல்வதற்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக ஜேபி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கட்டண சாலையான இதில் செல்வதற்கு ஒரு கிமீ.,க்கு ரூ.2.10 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காருக்கு ஒரு வழி செல்வதற்கு ரூ.350 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 3 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவு சாலை சுற்றுலாப் பயணிகளுக்கும், வட இந்தியர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








