சவாலான விலையில் ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்க ஃபோர்டு திட்டம்

ரினால்ட் டஸ்ட்டருக்கு அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எஸ்யூவி மாடல் ஈக்கோஸ்போர்ட்தான். நவீன தொழில்நுட்ப வசதிகள், கம்பீரமான வடிவமைப்பு மற்றும் புதிய ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் என அசத்தலான அம்சங்களுடன் வர இருக்கிறது ஈக்கோஸ்போர்ட்.
இந்தநிலையில், சமீபத்தில் பிரேசில் மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு 14 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவிலும் விலை அதிகமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுந்தது. ஆனால், இந்தியாவில் மிக சவாலான விலையில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்பதால் வரிச் சலுகை பெறும். இதேபோன்று, ஈக்கோஸ்போர்ட்டுக்கு தேவையான 80 சதவீத உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெற இருக்கிறது ஃபோர்டு.
இதன்மூலம், ஈக்கோஸ்போர்ட்டின் விலையை குறைத்து நிர்ணயிக்க பல வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் 9 லட்சம் விலையில் ஈக்கோஸ்போர்ட் வரும் என்று யூகத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், தற்போது 7 லட்சம் முதல் 9 லட்ச ரூபாயில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வரலாம் என்று ஆட்டோமொபைல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் கிளாசிக் செடான் கார்களின் விலையை சரியாக நிர்ணயித்து வெற்றி கண்டுள்ளது ஃபோர்டு நிறுவனம். மேலும், ரினால்ட் டஸ்ட்டரை மனதில் கொண்டு நிச்சயம் சவலான விலையை நிர்ணயித்து ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








