முதன்முறையாக உற்பத்தி நிலை ஈக்கோஸ்போர்ட் படங்கள் வெளியீடு
முதன்முறையாக உற்பத்தி நிலைக்கு செல்லும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் படங்களை ஃபோர்டு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த எஸ்யூவியை இன்று துவங்கிய பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்டு பார்வைக்கு வைத்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மார்க்கெட்டுகளை பதம் பார்க்க புதிய மினி எஸ்யூவியை ஃபோர்டு வடிவமைத்துள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது.

ஆனால், அது கான்செப்ட் மாடல். கான்செப்ட் மாடல் கார்கள் உற்பத்தி நிலைக்கு செல்லும்போது பல்வேறு வடிவமைப்பு மாற்றங்களை பெறும். அந்த வகையில், தற்போது உற்பத்தி நிலை வடிவமைப்பை பெற்றுள்ள ஈக்கோஸ்போர்ட் படங்களை முதன்முறையாக ஃபோர்டு வெளியிட்டுள்ளது.
டேஷ்போர்டு உள்ளிட்ட உள்ளலங்கார வேலைப்பாடுகள் அனைத்தும் ஃபியஸ்ட்டா காரிலிருந்து பெற்றுள்ளது ஈக்கோஸ்போர்ட். ஆனால், ஏசி வென்ட்டுகளின் வடிவமைப்பு வித்தியாசப்படுகிறது. டேஷ்போர்டில் டச்ஸ்கிரீன் உள்ளது. இரட்டை கலரில் இன்டிரியர் என உள்பக்கம் அசத்துகிறது.
ஃபோர்டு உருவாக்கியுள்ள புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சினின் புதிய தொழில்நுட்பம் அதிக மைலேஜ் மற்றும் அதிக பவர் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டது. இது டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும்.
கான்செப்ட் மாடலைவிட பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருக்கும் உற்பத்தி நிலை எஸ்யூவி மேலும் கம்பீர தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த எஸ்யூவி இந்தியா உட்பட 100 நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், இந்த எஸ்யூவி ஜப்பானிய நிறுவனமான மஸ்தா பங்களிப்புடன் ஃபோர்டு வடிவமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








